Wednesday, May 8, 2013

யார் நல்லவர்?

 


துறவியும் உழவன்தான்!
துறவி ஒருவர் ஒரு சமயம் ஒரு விவசாயியிடம் பிச்சை கேட்டார்.

அதற்கு அவன், ``நான் உழுதுண்டு வாழ்கிறேன். நீயும் ஏன் உழைக்கக்கூடாது?'' என்று கேட்டான்.

உடனே துறவி, ``அப்பனே! நானும் ஒரு வகையில் உழவன்தான். தர்மம்என்னும் வயலில் மரியாதை என்னும் கலப்பையால் விடாமுயற்சியெனும் எருது துணை கொண்டு பக்தியெனும் உழவு செய்கிறேன். என் விவசாயத்தில் எனக்கு அமோக விளைச்சல். என்னை நாடிய எல்லோரையும் காப்பாற்றுகிறேன்'' என்றார்.



பதிலுக்கு பதில்
ஒருநாள் பெருந்துறவி ஒருவர் அரசனது மரியாதையை ஏற்று பல்லக்கில் அரண்மனை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். வழியில் அவரைக் கண்ட ஏழைக் குடியானவன் ஒருவன், துண்டை இடுப்பில் கட்டிக் கொண்டு மரியாதை செலுத்தினான்.

துறவியும் பல்லக்கை விட்டு இறங்கி குடியானவனுக்கு பதில் மரியாதை செலுத்தினார். அப்போது அரசன் துறவியிடம், ``நீங்களோ பெருந்துறவி, தவசீலர். அந்த ஏழை பிரஜைக்கு பதில் மரியாதை செலுத்த வேண்டுமா?'' என்று கேட்டார்.

துறவி புன்னகையுடன், ``என்னை விடவும் பணிவும் மரியாதையும் தெரிந்த ஒருவர் இருப்பதை நான் விரும்புவதில்லை'' என்றார்.



நூறில் இரண்டாவது
தேறுமா?
துரியோதனனின் நூறு சகோதரர்களில் ஒருவர் கூடவா நல்லவரில்லை? இரண்டே இரண்டு நல்லவர்கள் உண்டு.

சூதாட்டத்தில் தருமன் தோற்ற பின்பு, தருமனின் மனைவி திரௌபதியைப் பணயம் வைக்குமாறு சகுனி கூறினான். தருமனும் சம்மதித்து மீண்டும் தோற்றான். சூதாட்டத்தில் `இதைப் பணயம் வை' என்று எதிராளி கூறக் கூடாது. சகுனி கூறி தருமன் வைத்ததால் திரௌபதி பணயப் பொருள் அல்ல. அது தர்மமும் அல்ல. இவ்வாறு கூறியவன் துரியோதனனின் தம்பி விகர்ணன்.

அதே சமயம் இச்செயலைக் கண்டு வெட்கி, தலைகுனிந்து நின்றவன் யுயுத்ஸு. போர்க்களத்தில் அபிமன்யு கொல்லப்பட்டவிதம் அதர்மம் என்று கூறி, போர்க்களத்திலிருந்தே வெளியேறியவனும் இதே யுயுத்ஸுதான். இவனும் துரியோதனனின் தம்பிதான்.

என்னதான் கெட்டவர்கள் என்றாலும் அக்கூட்டத்தில் இரண்டு பேராவது நல்லவர் இருப்பர்.



அரசனும் அடிமைதான்
அரசன் ஒருவன், ஒரு சமயம் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த ஒரு துறவியை அழைத்து வரச் சொன்னான். அரசன் தன் செல்வச் செழிப்பை அவருக்குக் காட்ட விரும்பினான். ``துறவியே...! உமக்கு என்ன வேண்டுமோ, கேள்! தருகிறேன்'' என்றான். மன்னனின் மனதை அறிந்து கொண்டார் துறவி. ``மன்னா! நீரே, இரண்டு அடிமைகளுக்கு அடிமையாக இருக்கின்றாய்... அப்படி இருக்கும்போது என் தேவைகளை எப்படி நிறைவேற்றி வைப்பீர்?'' என்று கேட்டார் துறவி. ``இந்த நாட்டையே ஆளுகின்ற அரசன் நான். என்னிடம் எத்தனை அடிமைகள் இருக்கின்றார்கள் என்று தெரியுமா? அப்படி இருக்கும்போது, நான் எப்படி இரண்டு அடிமைக்கு அடிமையாக இருக்க முடியும்?'' என்று கோபத்துடன் கேட்டான். ``மன்னா! ஏன் கோபப்படுகிறீர்? எல்லா அரசர்களுமே எனக்குக் கட்டுப்பட்ட இரண்டு அடிமைகளுக்கும் அடிமைப்பட்டுத்தான் இருக்கிறார்கள். அந்த இரண்டு அடிமைகளின் பெயர், ஆசையும் கோபமும்தான். இப்போது சொல்லுங்கள். இந்த இரண்டுக்கும் நீர் அடிமை இல்லையா?'' என்று அமைதியாக கேட்டார் துறவி. மன்னன் மௌனமானான்.



யார் நல்லவர்?
அந்த மடாதிபதி மக்களுக்கு அடிக்கடி அறிவுரை வழங்கினார். ஊர்மக்களும் அவரிடம் மிகுந்த மதிப்பு வைத்திருந்தனர். ஒரு சமயம் மடத்துக்கு வந்து அவரைச் சந்தித்த இளைஞன் ஒருவன், ``நம் ஊரில் மிருதங்கம் வாசிக்கும் இளைஞன் இருக்கிறானே... அவன் திருடித்தான் வாழ்க்கை நடத்துகிறான். கொடிய பாவி!'' என்றான். அதற்கு அவர், ``அந்தஇளைஞன் அபாரமாக மிருதங்கம் வாசிப்பவன் ஆயிற்றே!'' என்றார். அப்பொழுது இன்னொரு இளைஞன் மடத்துக்குள் நுழைந்து மடாதிபதியை வணங்கி விட்டு, ``ஐயா! நம் ஊரில் மிருதங்கம் வாசிக்கும் இளைஞனை உங்களுக்குத் தெரியுமா? யாராக இருந்தாலும் அவன் வாசிப்பைக் கேட்டால் தங்களை மறந்து விடுவார்கள்'' என்று பாராட்டிப் பேசினான். அதற்கு பீடாதிபதி, ``அவன் ஒரு திருடன் அல்லவா?'' என்றார். மடாதிபதி இப்படிப் பேசியதைக் கேட்டு முதலில் வந்தவன் திகைத்தான். ``ஐயா! அந்த இளைஞனைத் திருடன், பாவி என்றேன் நான். அதற்கு நீங்கள் அவன் அபாரமாக வாசிக்கிறான் என்று பாராட்டினீர்கள். ஆனால் இவர் வந்து அந்த இைளஞனைப் பாராட்டியபோது, நீங்கள் அவனைத் திருடன் என்கிறீர்கள். ஏன் இப்படி முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகிறீர்கள்?'' என்று கேட்டான். அதற்கு அந்த மடாதிபதி, ``ஒருவன் நல்லவனா கெட்டவனா என்று மதிப்பிட நாம் யார்? இந்த உலகில் யாரும்நல்லவனுமில்லை, கெட்டவனுமில்லை. அதனால்தான் அப்படிக் கூறினேன்!'' என்றார்.


குருவின் நன்றி!
ஒரு குருவிடம் பல சீடர்கள் பாடம் பயின்று வந்தனர். குருவிற்கு ஒரு பழக்கம் இருந்தது. பாடம் கேட்க சீடர்கள் வரும்போது வணக்கம் சொல்ல அனுமதிப்பார். ஆனால், பாடம் முடிந்து போகும்போது அவர்கள் வணக்கம், நன்றி சொல்ல அனுமதிக்க மாட்டார். மாறாக சீடர்களுக்கு அவர் நன்றி, வணக்கம் கூறி வந்தார். ஒரு நாள் சீடர்கள், ``இது சரியா? ஏன் அப்படிச் செய்கிறீர்கள் என எங்களுக்கு விளக்க வேண்டும்?'' என குருவிடம் கேட்டுக் கொண்டார்கள்.

அவர் சிரித்தபடியே, ``நீங்கள் என்னிடம் ஞானம் கேட்டு வரும்போது, எனக்கு வணக்கம் சொல்வது சரிதான்! ஆனால், இங்கிருந்து செல்லும்போது நான் நன்றி சொல்வதுதான் முறை. என் ஞானத்தை வெளிக்கொணர உதவுபவை உங்கள் கேள்விகளும், உங்கள் சந்தேகங்களும்தான். நீங்கள் கேள்வி கேட்காது விட்டால், என் ஞானம் என் உள்ளே அடங்கிவிடும். எனவே என் ஞானத்தை வெளிக்கொணர உதவியவர்களுக்கு நான்தான் நன்றி சொல்லக் கடமைப்பட்டவன். கிணற்றுக்குள் தண்ணீர் இருந்தாலும் யாருக்கும் பிரயோஜனம் இல்லை. அதை வெளிக்கொண்டு வந்தால்தான் அனைவருக்கும் பிரயோஜனம்'' என்றார். சீடர்கள் மகிழ்ந்து போனார்கள்.

No comments:

Post a Comment