Friday, January 18, 2013

சிந்திக்க, செயல்பட

ச்சே, ரொம்ப லேட்டாயிடுச்சே, என்று நினைத்துக்கொண்டே, மனம் சோர்ந்து, களைப்புடனும் வீட்டுக்குள் நுழையும்போது, வாசலிலிலேயே எனது ஐந்து வயது மகன் எனக்காகக் காத்திருந்தான்.
"அப்பா, உங்களெ ஒரு கேள்வி கேட்கலாமா?"
"கேளேன், என்ன விசயம்?"
"நீங்க ஒரு மணி நேரத்திலே எவ்வளவு சம்பாதிக்கிறீங்க?"
எனக்கு கோபம் வந்துவிட்டது.
"என் சம்பளத்தெப் பத்தி உனக்கென்ன?" "இதெல்லாம் உனக்கு தேவையில்லாத விசயம், போய் உன்னுடைய புக்ஸ் எல்லாத்தெ ஒழுங்கா எடுத்து வை."
"தயவு செஞ்சி சொல்லுங்கப்பா, எவ்வளவு அப்பா ஒரு மணி நேரத்துக்கு கிடைக்குது?"
மகனைப் பார்க்கப் பாவமாக இருந்தது. "எனக்கு ஒரு மணி நேரத்துக்கு 500 ரூபாய் கிடைக்குது." என்றேன்
"அப்படியா?"என்றுக் கேட்டவன் தலையைக் குனிந்துக் கொண்டான், பிறகு மெதுவாக தலையை நிமிர்த்தி "அப்பா,எனக்கு ஒரு 300 ரூபா கடன் கொடுக்க முடியுமா?"
எனக்குக் கோபம் தலைக்கேறி விட்டது. "இதுக்கு தான் நீ என்னுடைய சம்பளத்தெப் பத்திக் கேட்டையா?" "அதானேப் பார்த்தேன், அந்த காசிலெ தேவையில்லாத பொம்மெகளெ வாங்கி வீணாக்குறதுதான் உன் வேலெ.போ போய் தூங்கு."
மகன் ஒன்றும் பேசாமல் தனது அறைக்குச் சென்று கதவை மூடிவிட்டான்.
நான் சோபாவில் சரிந்தேன், பையன் கேட்டதை நினைக்க நினைக்க என் கோபம் மேலும் அதிகமானது. காசு வேணுங்கறதுக்காக என்னுடைய சம்பளம் எவ்வளவுன்னு கேக்கற அளவுக்கு இந்த பொடியனுக்கு தைரியம் வந்துருச்சே என்று மனம் கருவியது. அப்படியே கொஞ்சம் அசந்துவிட்டேன்.
திடீரென்று முழிப்பு வந்துப் பார்த்தால் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் கழிந்து விட்டிருந்தது. இப்பொழுது மனம் கொஞ்சம் தெளிவானது போல உணர்ந்தேன்.
பையனின் நினைப்பு வந்தது. "பொதுவா இந்த மாதிரி எல்லாம் அவன் பணம் கேட்க மாட்டானே. 300 ரூபாய் கேட்கிறான்னா, ஏதாவது முக்கியமான தேவை இருக்குமோ?" என்று நினைத்து கொண்டே பையனின் அறைக்குச் சென்றுக் கதவைத் திறந்தேன். "கண்ணா தூங்கிட்டெயா?"
"இல்லெப்பா, முழிச்சிட்டுதான் இருக்கேன்!"
"நான் ரொம்பா கோவமா உங்கிட்டெப் பேசிட்டேன்னு நெனைக்கிறேன்" "அது வந்து இன்னிக்கு ரொம்ப வேலை,களைப்பு, அந்த உளைச்சலெ (tension) உங்கிட்டெக் காட்டிட்டேன்". "இந்தா!நீ கேட்ட 300 ரூபா".
பையன் உடனே படுக்கையெ விட்டு குதித்து எழுந்துப் புன்னகையுடன், 'நன்றி அப்பா!'என்று கண்கள் விரிய சொன்னான். பிறகு, படுக்கையின் மேல் பக்கத்திற்குச் சென்று தலையணையின் அடியில் கையைவிட்டு, சில கசங்கிய ரூபாய் நோட்டுக்களை எடுத்தான்.
அதைப் பார்த்த எனக்கு கையில் காசு வைத்துக் கொண்டேக் கேட்கிறானெ என்று மீண்டும் கோபம் வந்துவிட்டது.
அவன், மெதுவாக தன் பணத்தை எண்ணத் தொடங்கினான், பிறகு என்னைப் பார்த்தான்.
உங்கிட்டெத் தானெ இவ்வளவு பணம் வச்சிருக்கே, பின்னெ எதுக்கு மறுபடியும் பணம்" என்று நான் கத்தினேன்.
"ஏன்னா, முதல்லெ எங்கிட்டெ கம்மியா இருந்தது. இப்ப சரியா இருக்குது",
"அப்பா, இப்ப எங்கிட்டெ 500 ரூபா இருக்குது, அதெ நா உங்களுக்கு கொடுக்கறேன்; நீங்க எனக்காக ஒரு ஒரு மணி நேரத்தெ ஒதுக்குங்க;
தயவு செய்து நாளைக்கி கொஞ்சம் சீக்கிரமா வாங்க: நாம இரண்டுப் பேரும் சேர்ந்து சாப்பிடலாம்."

No comments:

Post a Comment