Monday, September 17, 2012

கமலும் அஜித்தும் என்னை பாராட்டணும்! - சுந்தரபாண்டியன் நடிகரின் பலே ஆசை!

Sundarapandiyan Actor Soundararajan

திரையங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சுந்தரபாண்டியன் படத்தில் சசிக்குமாரின் நண்பர்களில் ஒருவராக பரஞ்சோதி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் நடிகர் சவுந்தரராஜா.

எலக்டரானிக் அண்ட் இன்ஸ்ட்ருமெண்டேசன் என்ஜினியரிங் படித்து விட்டு சிங்கப்பூர், லண்டன், துபாய் என வெளிநாடுகளில் வேலை பார்த்துக்கொண்டிருந்தவரை, சின்ன வயதிலேயே உள்ளுக்குள்ளே ஊறி விட்ட சினிமா கனவு சென்னைக்கு கூட்டி வந்தது.

வேலை பார்த்து சம்பாதித்துக்கொண்டு வந்த சில லட்சங்களை சென்னை வாழ்க்கையோடு சில குறும்படங்கள் எடுத்து கரைத்து விட்டு பல போராட்டங்களுக்கு பிறகு இப்போது சுந்தரபாண்டியன் என் வாழ்க்கையை ஆரம்பித்து வைத்திருக்கிறது என சந்தோசத்தோடு சொல்கிறார் சவுந்தரராஜா.

சுந்தரபாண்டியன் வாய்ப்பு எப்படி கிடைத்தது...

எனக்கு சசிக்குமார் சாரை ரொம்பப் பிடிக்கும். அவருக்கும் எனக்கும் ஏதோ ஒரு பந்தம் இருப்பதாய் என் உள்ளுணர்வு சொல்லும். பல கம்பெனிகளுக்கு நடிக்க சான்ஸ் கேட்டு அலைந்தேன். சுந்தரபாண்டியன் படம் பற்றி கேள்விப்பட்டு கம்பெனி புரொடக்சன்ஸ் ஆபிஸ் போனேன். இயக்குனர் பிரபாகரன் சாரைப் பார்த்து வாய்ப்பு கேட்டேன். அவர் என்னைப் பார்த்து விட்டு சரியா வராது. இது மதுரை உசிலம்பட்டில நடக்கிற கதை. நீங்க இங்கிலீஸ்ல பேசுறீங்க... உங்களுக்கு அந்த ஸ்லாங் வருமான்னு தெரியல என்று திருப்பி அனுப்பி வைத்து விட்டார்.

ஆனால் நான் விடவில்லை. இதில் ஆச்சர்யம் என்னன்னா எனக்கு சொந்த ஊரே உசிலம்பட்டி தான். உடனே நான் ஊருக்குப் போய் நானே இயக்கி நானே நடிச்சி உசிலம்பட்டி ஸ்லாங் பேசி ஒரு குறும்படம் எடுத்தேன். அதைக் கொண்டு போய் பிரபாகரன் சார்கிட்ட கொடுத்தேன். அதைப் பார்த்ததும் அவருக்கு பிடிச்சிப்போச்சி. நீ படத்துல இருக்கடான்னு சொன்னார்.

அப்புறமா தயாரிப்பாளர் சசிக்குமார் சாரும் அசோக்குமார் சாரும் பார்த்துட்டு அவங்களும் ஓ.கே.ன்னு சொன்னாங்க... என்னுடைய உள்ளுணர்வு சரி தான்னு இப்ப தோணுது.

முதல் பாராட்டு....

படம் ரெடியானதும் என்னை முதல்ல பாராட்டுனது சசிக்குமார் சார் தான்.
அடுத்தடுத்து நம்ம சேர்ந்து பண்ணலாம்னு சொன்னார். அவர் நடிக்கிற குட்டிப்புலி படத்துலயும் சசிக்குமார் நண்பனா நடிக்கிறேன்.

அடுத்தடுத்த ஆசைகள்...

சினிமாவுல தான் கடைசி வரைக்கும் என் வாழ்க். நல்ல நடிகனா இருக்கணும், நல்ல நடிகன்னு பேர் வாங்கணும். என்னைப் பொறுத்தவரைக்கும் நான் நடிகன். நிர்வாணமா என்னை நடிக்கச் சொன்னாக் கூட நான் நடிப்பேன். எனக்கு கமல்சாரையும் அஜித் சாரையும் ரொம்ப பிடிக்கும். நான் நடிக்க வந்ததுக்கு அவங்க ரெண்டு பேரும் தான் முக்கிய காரணம். நான் நடிக்கிற படத்தை பார்த்துட்டு அவங்க ரெண்டு பேரும் கூப்பிட்டு, சவுந்தர் ரொம்ப நல்லா நடிச்சிருக்கேன்னு சொல்லணும் அதான் என் ஆசை.

குறிப்பு: வெளிநாடுகளில் வேலை செய்து சம்பாதித்த பணத்தில், மும்பையில் புரொடக்சன் டிசைன் படித்து சென்னை வந்து Madurai Touring Talkies என்ற நிறுவனத்தை துவங்கி, Stone Bench என்ற இன்னொரு நிறுவனத்துடன் இணைந்து துரு, ராவனம், பெட்டி கேஸ், விண்ட் போன்ற குறும்படங்களை தயாரித்திருக்கிறார் சவுந்தரராஜா.

No comments:

Post a Comment